ஸ்டாலின், உதயநிதி பதவி விலக எடப்பாடி கோரிக்கை !
போதைப் பொருட்கள் கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ஜாபர் சாதிக் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது…
திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக். அவர் மூன்று ஆண்டுகளாக போதைப் பொருள் தயாரிப்புக்கான 3 ஆயிரத்து 500 கிலோ மூலப்பொருளை கடத்தியதாகவும், அதில் கிடைத்த வருமானத்தில் திமுகவுக்கு நிதி அளித்ததாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தன. போதைப்பொருள் கடத்தல் பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு அவர் நிதி அளித்தார் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, அவருக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்தவர் முதல்வர் ஸ்டாலின். மேலும், சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்ட பதிவுகளில் இருந்து, ஜாபர் சாதிக்குடன் அவர் நெருக்கம் காட்டினார் என தெரிய வருகிறது. இதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால், தார்மீக பொறுப் பேற்று, இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும், இவ்வாறு பழனிசாமி பதிவிட்டுள்ளார்.