ஸ்ரீரங்கத்தில் விண்ணைப்பிளந்தது ரெங்கா ரெங்கா கோஷம்..
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனப்படும் தேர் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் தினமும் யாளி வாகனம் கருட வாகனம் யானை வாகனம் தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்,தை தேர் உற்சவத்தின் 9ம் திருநாள் முக்கிய நிகழ்ச்சியான தை தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
இதற்காக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தை தேர் மண்டபம் வந்தடைந்தார், பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். உத்திர வீதியில் உள்ள தைத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாளை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டவாரு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.