ஸ்ரீரங்கத்தை தொடர்ந்து, திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம் !
திருச்சி மாநகரம் திருவானைக்காவலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளின் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்து, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து இன்று, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ‘சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வழங்கிய பரிந்துரை கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது அவசர, அவசிய தேவைகளுக்கு தங்களது சொத்துக்களை விற்பதற்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும்’ என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் நேரில் மனு அளித்தனர்.
மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தலைமையில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர், அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர், அடிமனை குழுவினரிடம் விரைவில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும்’ என்று உறுதியளித்தார்.