ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தெப்போற்சவம்…
நேற்று மதியம் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபநாச்சியார் சகிதம் புறப்பட்டு மாலை ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் வடகரை ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார். அங்கு பெருமாள் உபயநாச்சியார்களுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
இரவு 7.15 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் உபயநாச்சியார்கள் மின்னொளியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். அடுத்து 7.30 மணிக்கு தெப்போற்சவம் துவங்கியது. தெப்பக்குளத்தின் வடக்கு கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம், நான்கு கரைகளிலும் நின்ற பக்தர்களுக்கு சேவை சாதித்தக்கும் வகையில் வலம் வந்தது.
இரவு 9 மணிக்கு மூன்றாவது சுற்றின்போது பெருமாள் தாயார் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டபின், மீண்டும் பெருமாள் தாயார் தெப்பத்தில் ஏறி சுற்றை நிறைவு செய்தபின் கரை சேர்ந்தனர்.
அதையடுத்து உபயதாரர்களுக்கு மரியாதைக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு மற்றும் வடக்குவாசல் வழியாக இரவு 11.15 மணிக்கு மூர்த்திகள் மூலஸ்தானம் சேர்ந்தனர்.
தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். தெப்பத்திருவிழா இன்று நிறைவடைகிறது.