வேலூர் : இரயிலில் கடத்தி வந்த 36 கிலோ கஞ்சா பறிமுதல் இரு வாலிபர்கள் கைது !!
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலைய காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான சிறப்பு குழுவினர் பிறமாநிலங்களில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஜார்கண்ட் மாநிலம் ஹாட்டியாவில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் யஷ்வந்பூர் விரைவு இரயிலில் மேற்கொண்ட போது முன்பதிவு பெட்டியில் கழிவறையின் அருகே நின்று கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த விகாஷ்பாபு வைத்திருந்த டிராவல் பேக்கை சந்தேகத்தின்பேரில் திறந்து சோதனை செய்துள்ளனர்.
அதில் 5 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விகாஷ்பாபுவை போலீசார் பிடித்து, அவரிடமிருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த பெட்டியில் நடத்திய சோதனையில் பீகாரை சேர்ந்த ரவிராஜ்வன்சி வைத்திருந்த டிராவல் மற்றும் லக்கேஜ் பேக்குகளில் 13 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் 30 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காட்பாடி ரெயில்வே போலீசார் இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவையும் வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அவர்கள் வழக்குப்பதிந்து விகாஷ்பாபு, ரவிராஜ்வன்சி ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.