2024ல் தை அமாவாசை எப்போது ?
இந்த ஆண்டில் தை அமாவாசையானது பிப்ரவரி 9ம் தேதி 2024 வெள்ளிக்கிழமையன்று வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது காலை 08.05 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 10, 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடிவடைகிறது. அமாவாசை திதியானது பிப்ரவரி 9ம் தேதி காலையிலேயே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்குவது நல்லது.
திதி கொடுக்க நல்ல நேரம் காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் கொடுக்கலாம். மகாளாய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை முன்னோர்களான பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்சகாலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். அதே போல தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவார்கள் என்பது ஐதீகம்
.நாள் முழுவதும் அமாவாசை திதி இருந்தாலும் காலை பொழுதிலேயே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். உச்சிபொழுதிற்குள் பிதுர் காரியங்களை நிறைவேற்றி, எள்ளும் தண்ணீரும் இரைத்து, காகத்திற்கு உணவிட வேண்டும். உச்சி பொழுதிற்கு பிறகு தர்ப்பணம் கொடுக்க கூடாது.அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு செய்வது தர்ப்பணம் ஆகும்.
இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு வணங்கிவிட்டு நாம் சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும் என்கிறார் ஸ்ரீதர் சாஸ்திரிகள்.