அதிமுக வேட்பாளர்கள் 24ம் தேதி திருச்சியில் அறிமுகம் ?
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் இப்போது மக்களுடன் கூட்டணி என்ற நிலையை நோக்கி அதிமுக பயணித்து வருகிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு 4 முதல் 5 தொகுதி ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கூட்டணி பேச்சுவார்த்தை குழுவோடு நேற்று ஆலோசனை நடத்தினார். இதுகு றித்து அதிமுக வட்டாரத்தில் கூறியது… பாமக எப்படியும் கூட்டணிக்கு வரும், அதன் மூலம் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத் தில் பாமக கைநழுவி சென்றது. இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதிமுக தனித்து மக்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. அதே உத் வேகத்துடன் இந்த தேர்தலையும் சந்திக்க வேண்டும். அதற்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இனி யாருக்கும் காத்திருக்காமல் மார்ச் 21ல் (நாளை) வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அன்றைய தினமே தேர்தல் அறிக்கையையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் வரும் 24ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் திருச்சி பிரச்சார பொதுக்கூட்டம் திருப்பத்தை தரும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேமுதிகவுக்காக மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டாம் என்று கட்சியில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் முதல் பிரச்சார கூட்டத்தை திருச்சியில் தொடங்க உள்ளதால் மிகபிரம்மாண்டமாக நடத்த முன்னாள் எம்.பி.குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.