அசரவைத்த அரங்கன் ! ரெங்கா !!ரெங்கா !!!
கடுமையான காவிரி ஆற்றை கடந்து செல்கின்றான் அரங்கன். முக்கால் அறுத்த கதிர் வயலில் கடந்து செல்கின்றான் அரங்கன்.சமதளமில்லாமல் மேடு கடந்து செல்கின்றான் அரங்கன்.
எங்கே செல்கின்றான் ?
ஸ்ரீரங்கத்திலிருந்து ஜீயர்புரத்திற்கு.
ஏன் செல்கின்றான் ?
கிழவியை காண.அவள் அன்பாய் தரும் தயிர் சாதம் உண்ண செல்கின்றான்.
என்ன கிழவியை காணவா?
ஆமாம் …நாம் அரங்கனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்தடி முன்வருவான் அது போல் வந்தான் கிழவிக்காக.
ஜீயபுரத்தில் அரங்கன் மீது அளவில்லா பக்தி கொண்டவள் கிழவி.. தனது பேரனுக்கு கூட அரங்கன் என பெயர் வைத்தாள்.பேரன் ஷவரம் பண்ண சென்றவன் காவிரி வெள்ளத்தில் சிக்கினான்.நேரம் கடந்து வராதவனை அரங்கா என அழைத்தாள் கிழவி.வந்தான் அரங்கன்.ஆம் …அந்த ரங்கன் நேராக பேரனுக்கு பதிலாக வந்து நின்றான்..
கிழவி கையால் தயிர் சாதமும் கீரையும் உண்டான்.வெள்ளம் வடிந்த உடன் அந்த பேரன் வந்தான். விவரம் சொன்னான்.பிறகு வந்த்து யார் என யோசனையுடன் ஷவரம் செய்தவனை விசாரிக்க ஆம் வந்தான் என சொல்ல.கிழவிக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.எனது பேரனுக்கு பதில் வந்தவன் திருவரங்க ரங்கனா என ஆனந்த கூத்தாடினாள்..ரங்கா ரங்கா என மகிழ்ச்சி கூத்தாடினாள்.
அரங்கன் அனைவருக்குமானவன் என அடிக்கடி உலகுக்கு உணர்த்திய சம்பவங்களில் இதுவும் உண்டு. ஆண்டு தோறும் பங்குனி ஆதி பிரமோற்சவத்தில் கிழவியை காண அவள் தரும் தயிர் சாதம் உண்ண அரங்கன் எழுந்தருகிறான் ஜீயபுரத்தில், இந்த ஆண்டுக்கான சேவை இன்று நடந்தது சேவித்தோம் அரங்கனை.கிழவிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அருள் புரியட்டும் அரங்கன். அவன் அருள் கிடைக்க நாம் என்ன செய்யலாம். இருந்த இடத்தில் நினைத்த நேரத்தில் ஒரு நொடி மனதால் அரங்கா என நினைத்தால் போதும் சகலத்தையும் தீர்க்க ஒடோடி வருவான் நம் அரங்கன்.