சதுரங்க வேட்டை : ஆசைய காண்பி ஆட்டைய போடு…
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்வதாக கவர்ச்சிகரமான வார்த்தை கூறி ஆன்லைனில் பணம் பறிமாற்றம் செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 நபர்கள் காவல்துறையால் கைது..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாதலமாகும், இங்கு நிலவும் இதமான காலநிலையை கொண்டாடி மகிழ தமிழகமட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில சுற்றுலாப்பயணிகள் நாள் தோறும் வருவது வாடிக்கையான ஒன்று, இந்நிலையில் சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து அவர்களிடம் கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி விளம்பரங்களை காட்டி விளம்பரத்தில் பரிசு விழுந்தால் வெளி நாட்டிற்கு அழைத்து செல்வதாகவும் வருடத்திற்கு 7 நாட்கள் 10 வருடத்திற்கு உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் தங்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதற்கு நபர் ஒன்றிற்கு ரூபாய் 1, 75, 000 கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும் பல சுற்றுலாப்பயணிகளிடம் பணம் பறித்து வந்துள்ளது இந்த டிப்டாப் வட மாநில கும்பல், இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரை சேர்ந்த சுற்றுலாப்பயணியான ராஜ்குமாரையும் இந்த வட மாநில கும்பல் பிரையண்ட் பூங்கா அருகே அணுகியுள்ளது, இவர்களின் கவர்ச்சி வார்த்தையில் மயங்கிய ராஜ்குமார் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஆசையில் வட மாநில கும்பல் கூறிய வெப்சைட் மூலம் 2 நபர்களுக்கு மூன்றரை லட்ச ரூபாய் கட்டணமாகவும் செலுத்தியுள்ளார்.
சில நாட்கள் கழித்து இவர்களை தொடர்பு கொண்ட போது வட மாநில கும்பல் கொடுத்த அலைபேசியும் வேலை செய்யவில்லை, வெப்சைட்டும் முடங்கியுள்ளது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்குமார் உடனடியாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் வட மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 நபர்கள் சில மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டதும், கொடைக்கானல் பேருந்து நிலைய பகுதியிலேயே வீடு மற்றும் பல அலுவலகம் வாடகைக்கு எடுத்து தங்கி பல சுற்றுலாப்பயணிகளிடம் ஏமாற்று வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதில் ஹரியானாவை சேர்ந்த அணில் அஜய் மேக்சா, மும்பை தானேவை சேர்ந்த சுருதி, மும்பையை சேர்ந்த சாவாஜ், சாமா, ராகுல்சா, தெற்கு டெல்லியை சேர்ந்த சிவா, ஹிமாச்சல் பகுதியை சேர்ந்த தீபிகா ஆகிய 7 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கும்பல் மோசடிக்கு பயன்படுத்திய ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், டேப்லட், போலி அடையாள அட்டை, பரிசு கூப்பன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதே போல 30 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.