மத்திய அரசின் நிகழ்ச்சி : மணப்பாறையில் கரூர் எம்பி ஜோதிமணி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…
இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம், அடிப்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், துவக்கி வைத்தல், நாட்டுக்கு அர்ப்பணித்தல் பணிகளை பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசியபோது, பயணிகள் ரயில் கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் ரயில்வே துறையாக இருந்தாலும், தமிழக அரசு நடத்துகின்ற போக்குவரத்து துறை என எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் லாபகரமாக நடத்த முடியாது. மக்களுக்கு எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என மத்திய அரசை விமர்சனம் செய்து பேசியபோது பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என தொடர்ந்து முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
அப்போது எம்பி ஜோதிமணி நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் உங்கள் வீட்டில் இருந்து யார் சென்றாலும் நான்கு மடங்கு காசு கொடுத்துதான் செல்லவேண்டும். நீங்கள் சத்தம் போடுவதால் இல்லை என்றாகிவிடாது நாம் எல்லோருக்குமான கோரிக்கைதான். பயணிகள் ரயிலில் லாபம் வரவில்லை என்றாலும் சரக்கு ரயிலில் வரும் லாபத்தை வைத்து பயணிகள் ரயிலை நிறுத்தவேண்டும். என்றார்.
அடுத்ததாக மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் பேசும்போது, எம்பி மக்கள் கோரிக்கைகளைத்தான் நமது தேவைகளைத்தான் பேசினார் அதனை அரசில் ஆக்கக் கூடாது என்றபோதும் பாஜகவினர் மீண்டும் கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரும் பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.
பின்னர் எம்பி ஜோதிமணி மற்றும் மேடையில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக காங்கிரஸ் கட்சியினர் நிகழ்ச்சியின் பாதியிலேயே விழாவில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் செல்லும்போதும் பாஜகவினர் மீண்டும் மோடி மோடி என்று முழக்கங்கள் எழுப்பினர். அப்போது எம்பியை பின்தொடர்ந்து சென்ற பாஜகவைச் சேர்ந்த பெண் பார்வதி என்பவர் எம்பியுடன் வாக்குவாதம் செய்து அவர் காரில் ஏறியபோதும் விடாமல் எம்பியுடன் வாக்குவாதம் செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்ட விழாவிலும் தகராறு ஏற்பட அவரும் ஒருமையில் பேசிவிட்டு பாதியிலேயே கிளம்பினார்.
எம்.பிக்கள் புறப்பட்டு சென்ற பின்னர் தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே துறை அதிகாரிகள், பாஜகவினர் கலந்து கொண்டனர்.
கூட்டணிக்கட்சியான திமுகவினர் இருவர் மீதும் அதிருப்தி தெரிவித்து இருவருக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்க கூடாது எனக்கூறி வரும் வேளையில் இப்பொழுது போகுமிடமெல்லாம் இருவருக்கும் எதிராக மக்கள் கிளம்பி இருக்கிறார்கள், இந்நிலையில் செல்வப்பெருந்தகை டெல்லிக்கு அவசரமாக சென்றிருப்பது கூட்டணியில் குழப்பம் ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.