திருச்சி வாழ் மக்களே உங்கள் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியுமா ?

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் நேற்று பங்குனி உத்திர நன்னாளில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அவர்கள் தங்களது குடும்ப சொத்து விவரங்களாக கூறியிருப்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான்…

துரை வைகோ : மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அவரது மனைவி கீதா, மகன் வருண், மகள் வானதிரேணு ஆகியோர் அடங்கிய குடும்பத்திற்கு அசையும் சொத்துகளாக ஒரு கார், 2.71 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி நகைகள், 2 வைர நகைகள் உட்பட அசையும் சொத்துகள் ரூபாய் 2 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 789 மதிப்பில் உள்ளது. வேளாண்நிலங்கள், வீடுகள் என சுயமாக வாங்கியது, பரம்பரை சொத்துகள் என ரூபாய் 33 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 498 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளன எனக்குறிப்பிட்டுள்ளார். இதன்படி துரை வைகோவின் குடும்ப சொத்து மதிப்பு ரூபாய் 35 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரத்து 287 ஆகும். ஒரு கோடியே 35 லட்சத்து 65 ஆயிரத்து 324 கடன் நிலுவையில் உள்ளது என்றும் தன் மீது எந்த வழக்கும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

logo right

 

கருப்பையா : அதிமுக வேட்பாளரான கருப்பையா, அவரது மனைவி விமலா. மகன்கள் குருநாத், மகிபாலா ஆகியோர் அடங்கிய குடும்பத்திற்கு 5 டிப்பர் லாரிகள், 2 டேங்கர் லாரிகள், 3 கார்கள், 70 பவுன் தங்க நகைகள் உட்பட ரூபாய் 2 கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 542 மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளனவாம். அசையா சொத்தாக ரூபாய் 30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நிலமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கருப்பையாவின் குடும்பத்திற்கு ரூபாய் 2 கோடியே 82 லட்சத்து 83ஆயிரத்து 542 மதிப்பில் சொத்துகள் உள்ளன. வங்கியில் ரூபாய் 3 கோடியே 7 லட்சத்து 82 ஆயிரத்து 215 கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் மீது ஒரு வழக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செந்தில்நாதன் : அமமுக வேட்பாளர் செந்தில்நாதன், இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் அடங்கிய குடும்பத்திற்கு, 2 கார்கள், ஒரு டூ வீலர், 1.100 கிலோ தங்கம் உட்பட ரூபாய் 88 லட்சத்து 31 ஆயிரத்து 187 மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளது. பூர்வீக மற்றும் சுயமாக வாங்கிய வேளாண் நிலங்கள், வீடுகள் என ரூபாய் 7 கோடியே 30 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளன. மொத்தம் ரூபாய் 8 கோடியே 18 லட்சத்து 31 ஆயிரத்து 187 மதிப்பிலான சொத்துகள் உள்ளன எனவும். கடனாக ரூபாய் 64.08 லட்சம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளதோடு. இவர் மீது ஆர்ப்பாட்டம், கட்சி கொடி கட்டியது தொடர்பாக 2 வழக்குகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.