உயிர்போகும் வரை உண்ணாவிரதம் விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி….
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த மேல்மா சிப்காட் 3வது விரிவாக்கத்திற்கு 3,170 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 20 நபர்களை கைது செய்து 7 விவசாயிகள் மீது குண்டர் தடுத்து சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தினர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தால் தமிழக அரசு குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் செய்யார் மேல்மா பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவரும் விவசாயிகள் இல்லையென்றும், அவர்கள் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், உண்மையான விவசாயிகளின் விலாசத்தை அளிக்கிறேன் என்று பேசியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டமன்றத்திற்கு சென்று முதல்வரை பார்க்க கிளம்பினர். விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் முதல்வரை பார்க்க அனுமதி வாங்கி தருவதாகவும், அதற்கு பிறகு 10 நபர்கள் முதல்வரை சந்திக்க அனுமதி அளிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அனுமதி பெற்று தராமல் காவல்துறையினர் விவசாயிகளை அலைகழித்ததால் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 நாட்களாக மேல்மா சிப்காட் பகுதியில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் 9 விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து பெருமாள் மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ரேணுகோபால், தேவன், சந்திரன், மணிகண்டன், ராஜா, மாசிலாமணி மற்றும் நேதாஜி ஆகிய ஏழு நபர்களையும் இன்று காலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மருத்துவமனை வந்த விவசாயிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த விவசாயிகளை காவல்துறையினர் மீண்டும் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக அழைத்து வந்து சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சட்டமன்றத்திற்கு சென்று முதல்வரை சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் காவல்துறையினர் வேண்டுமென்று முதல்வரை சந்திக்க விடாமல் தங்களை தடுத்து வருவதாகவும், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் கொண்டு வர வேண்டாம் என்று தான் விவசாயிகள் தெரிவித்து வருவதாகவும், இதற்காக குண்டர் தரப்பு சட்டம் கூட விவசாயிகள் மீது பாய்ந்து, தற்போது வலுக்கட்டாயமாக மருத்துவமனை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயியாக பிறந்தது ஒரு குற்றமா எனவும், முதல்வர் தங்களை சந்திக்கவில்லை என்றால் உயிர் போகும் வரை உண்ணாவிரதம் இருப்பது தங்களுடைய குறிக்கோள் என்று விவசாயிகள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.