பெட்டி கிடைச்சாச்சு ! பெட்டி கிடைச்சாச்சு !! தீப்பெட்டி கிடைச்சாச்சு…
திருச்சி , நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., கூட்டணி சார்பில், ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார். ம.தி.மு.க., ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால், ஏற்கனவே அவர்கள் போட்டியிட்ட பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது, என்று தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. தற்போது, ம.தி.மு.க., வேட்பாளருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது… இந்தியாவை இருளில் தள்ளிய 10 ஆண்டு கால பாசிச பா.ஜ.க, ஆட்சியை அகற்றி விடியலை தரப்போகும் தி.மு.க., கூட்டணி கட்சிக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருச்சி தொகுதி முழுவதும் சென்று வருகிறேன். மக்கள் முக மலர்ச்சியோடு வரவேற்கின்றனர். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு முடிவு எடுத்து விட்டனர். பா.ஜ.க, கட்சி வீழத்தப்பட வேண்டும் என்று, தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளனர். ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சின்னமாக இருப்பதால், எல்லோரிடமும் எளிதில் போய் சேரும் சின்னம் இது. இந்தியாவிலேயே தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி மிகவும் பவர் புல்லானது. தொகுதி முழுவதும் 24 மணி நேரத்தில் சின்னம் போய் சேர்ந்து விடும்.
முதலில் கேட்ட பம்பரம் சின்னம் கிடைத்திருந்தால் சந்தோஷம். அடுத்த நாங்கள் எதிர்பார்த்த பாசிஷத்தை சுட்டெரிக்கும் சின்னம் கிடைத்துள்ளது. அமைச்சர் நேருவுக்கு சமீபத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்ட போதிலும், என்னோடு வந்து ஆதரவு திரட்டி வருகிறார். அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.,வினர் அனைவரும் ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து செயல்படுகின்றன. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் அவரவர் வேட்பாளர் போட்டியிடுவதாக கருதி தேர்தல் பணி செய்கின்றனர். வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற துறைகளை எதிர்க்கட்சியை ஒடுக்கப் பயன்படுத்தியது போல், அந்த வரிசையில், தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்துகின்றனர். ஒருதலைபட்சமான செயல் என்று கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கினர். அடுத்து 1,800 கோடி வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மத்திய அரசு சார்ந்த துறைகளை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஜனநாயகத்துக்கு பாதுகாக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமை. ஜனநாயகத்துக்கு விரோதமான பா.ஜ.க, ஆட்சியை அகற்ற மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க, கட்சியின் முக்கிய தலைவர் பலர் போட்டியிடும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏன் விதிவிலக்கு? ஜாதி மத அரசியலாக கூடாது என்று சொல்லும் அவர்கள், கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடுவது ஏன்? ஜாதி, மதம் பற்றி பேசக் கூடாது என்று நினைக்கிறேன். பேசவும் மாட்டேன். மத்திய நிதி அமைச்சரின் கூற்று பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களையும், எதிர்க்கட்சிகளையும் குழப்பும் அண்ணாமலையே ஒரு குழப்பவாதிதான் இதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பொய்யான தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துகிறார். முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதை அவர் நிரூபித்து வருகிறார். பா.ஜ.,வுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகளுக்கு எல்லாவிதமான நெருக்கடியெல்லாம் கொடுப்பார்கள். தேர்தல் விதிமுறை, கட்டுப்பாடு எதிர்க்கட்சிக்களுக்கு மட்டும் தான். தேர்தல் நெருங்கும் போது, பா.ஜ.க, கட்சியினர் எல்லாவிதமான அக்கிரமங்கள், அத்துமீறல்களையும் செய்வார்கள். அண்ணாமலை அனைத்து தலைவர்களையும், அடையாளங்களை கொச்சைப்படுத்தி வருகிறார். பா.ஜ., கட்சியின் வீழ்ச்சிக்கு, அவர் தான் ஒரு காரணமாக இருக்கப் போகிறார்.
அந்த நேரத்தில், பல்வேறு சம்பவங்கள் மனதில் ஓடியதால், செயல்வீரர்கள் கூட்டத்தில், என் உணர்ச்சியின் வெளிப்பாடு அப்படி இருந்தது. அதை இப்போது உணர்கிறேன். நல்ல புரிதலோடு, ஒற்றை இலக்கோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டணி புதிதல்ல; ஏழு ஆண்டுகளுக்கு முன் கசப்பான அனுபவங்களை மறுப்பதற்கு இல்லை. பா.ஜ.க, வேரூன்றுவதால், தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஆபத்து. எனவே, தமிழகத்தின் நலன் கருதி, திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து உள்ளன. இவ்வாறு, கொட்டித்தீர்த்தார்
#விதுரன் செய்திகளை உடனடியாக வாட்ஸாப் மூலம் அறிய Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs
Comments are closed, but trackbacks and pingbacks are open.