தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. இது குறித்த வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
மாஸ்டர் ராகவா லாரன்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக சமூகத்தில் பல உதவிகளைச் செய்து வருகிறார். உடல் ஊனமுற்ற குழந்தைகள் அவரின் இலவச நடன பள்ளியில் பயின்று பெரிய இடத்தை அடைந்துள்ளனர். பல ஏழைக்குழந்தைகளையும் ஒரு ஹாஸ்டல் மூலம், தங்க இடம் தந்து அவர்களை படிக்கவும் வைத்து, அவர்கள் வாழ்வில் உயர வழி செய்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் உதவி கேட்டு வந்த ஒரு தாயால் இந்தப்பயணம் தொடங்கியது. சிறுவனாக வந்து சேர்ந்த சக்தி தற்போது வளர்ந்து இளைஞனாகி, படித்து முடித்து, இன்று பணியில் இணைந்துள்ளார்.
இது குறித்து சக்தி கூறுகையில்…என் 4 வயதில் என் தந்தையை இழந்து விட்டேன் அப்போது இருந்து இங்கு அண்ணனின், ஹாஸ்டலில் தான் என் வாழ்க்கை. இங்கு உள்ள குழந்தைகள் தான் என் உலகம். அண்ணன் எப்போதும் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். இன்று நான் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளேன். எனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை இங்கு இந்த குழந்தைகளுக்காக செலவு செய்வேன் என்றார்.
சக்தியை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தெரிவித்ததாவது…நான் போட்ட விதை இன்று வளர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த தாய் என் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றார். அன்று அவர்களை என் வீட்டுக்கு அழைத்து சென்றேன், இரண்டு குழந்தைகள் இன்று 60 குழந்தைகளாக ஆகி விட்டார்கள். சக்தி இன்று வளர்ந்து ஒரு பணியில் இணைந்திருக்கிறார். காவல்துறையில் இணையவும் முயற்சி எடுத்து வருகிறார். மிகப்பெருமையாக உள்ளது என்றார். இன்னொரு சிறுவனை சக்தி கையில் தந்து இவனுக்கான செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் ஆனால் இவனை பொறுப்பாக வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு என அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை தர சக்தி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். மனதை உருக வைக்கும் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. இவ்வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸுக்கு பராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.