ஓவர் ஓவர் டூ ஸ்கார்ட்லாண்ட்யார்டு ஓவர்…
மலைக்கோட்டை மாமன்னன் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் அன்புச்சகோதரரும் எம்.டி என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட ராமஜெயம், 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கை முதலில் திருச்சி மாநகர போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றம் இல்லை என்பதால் அவரது மனைவி லதாவின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது அதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) ஏற்படுத்தி தற்பொழுது அக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், திருச்சி சாமி ரவி, மாரிமுத்து, சத்யராஜ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன், கடலுார் சிறையில் இருக்கும் செந்தில்குமார் ஆகிய 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில், குடவாசலைச் சேர்ந்த தென்கோவன் தவிர மற்ற அனைவரும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடந்தது. இந்த சோதனை முடிவி லும் வழக்கு விசாரணை யில்முன்னேற்றம் இல்லை. இதையடுத்து இந்த ரவுடிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் தினேஷ் குமாரை திருச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல மாமாங்கமாய் முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பதால் காவல்துறையினரின் மீது இருக்கும் மரியாதை தேய ஆரம்பித்துள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 01.11. 2022ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 6ல் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதியிடம் அனுமதி பெற 13 ரவுடிகள் ஆஜர்படுத்தபட்டனர். அவர்கள் (ரவுடிகள்) தரப்பு வழக்கறிஞர்கள் முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று வாதத்தை முன் வைத்தனர். முக்கியமாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி நேரில் ஆஜராகி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 01.11.2022ம் தேதி அன்று நீதிபதி சிவக்குமாரிடம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
(பாலிகிராப் சோதனை)உண்மை கண்டறியும் சோதனை எந்த வகையில் நடத்த போகிறார்கள் (SIT), என்ன கேள்விகள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ரவுடிகள் தரப்பு வழக்கறிஞர் வாதமிட்டனர். அனைத்து ரவுடிகளும் தங்களது வழக்கறிஞர் மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதமா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதி சிவக்குமார் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை 14.11.2022ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் அப்பொழுதைய எஸ்.பி ஜெயக்குமார் (தற்பொழுது திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் )செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில். உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். எங்கள் தரப்பில் அனைத்து மனுக்களையும் சரியான முறையில் தாக்கல் செய்துள்ளோம். ஆனால் ரவுடிகள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் சரியான மனு தாக்கல் செய்யவில்லை என பொய் கூறுகிறார்கள் என்றார். எதுவாக இருந்தாலும் வரும் 14ம் தேதி தெளிவாக தெரிந்து விடும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்த நிலையில் தற்பொழுது இவ்வழக்கை கூடுதலாக கண்காணித்து வருகிறார்.
உண்மை கண்டறியும் சோதனை பட்டியலில் உள்ள சத்யராஜின் வழக்கறிஞர் அலெக்சியஸ் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…. ராமஜெயம் கொலை வழக்கு தாமதமாவதற்கு காரணம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தான். நாங்கள் தான் முதலில் உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்வதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கான ஆவணங்கள் எதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மேலும் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால், 50 லட்ச ரூபாய் சன்மானம் என்று அறிவித்தது எப்படி? இதுகுறித்து அப்பொழுதைய தமிழக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் விளக்கம் கேட்க உள்ளோம்.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பாலிகிராட் சோதனை செய்யப்படுகிறது. இதற்கு நாங்கள் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யவில்லை. நாங்கள் குற்றமில்லாதவர்கள் என்பதை நிரூபிக்க அனைத்து சோதனைக்கும் தயார். ஆனால் எந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது என்பதை சிபிசிஐடி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. சந்தேகிக்கப்படும் நபர்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் பொழுது ஒரு வழக்கறிஞரும், மருத்துவரும் எங்கள் தரப்பில் அனுமதிக்க வேண்டுமென கூறியுள்ளோம் என தெரிவித்தார்.
ராமஜெயம் கொலை வழக்கின் ஒரே துருப்புச்சீட்டு ’ MARUTHI VERSA ‘ மட்டுமே ஆனால் அதனை வாங்கி விற்றவர் என சந்தேகப்பட்ட ஆம்புலன்ஸ் பிரபு என்பரை விசாரணைக்கு வரச்சொன்னது எஸ்.ஐ.டி, ஆனால் என்று இரவே அவர் சிலரால் அவரது அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார், இருப்பினும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறை அவற்றை வைத்து நால்வரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது வந்தது வந்தது அதன்பின் எவ்வித தகவலும் இல்லை. தமிழக காவல்துறையை ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு இணையாக்கூறி புளங்காகிதம் அடைவார்கள் ஒருவேளை அவர்கள்தான் விசாரணைக்கு வர வேண்டுமோ என்னவோ. ராமரின் வனவாசம் முடிந்தது 14 ஆண்டுகளில்… ராமஜெயத்தின் வனவாசம் ?
வாட்ஸாப் குழுவில் இணைய இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs
Comments are closed, but trackbacks and pingbacks are open.