ஆறே ஆறு இல்லைனா ஓடு !
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் எந்த கூட்டணியும் இன்னும் முடிவாகவில்லை இந்நிலையில் காங்கிரஸ் மேலிட அவசர அழைப்பால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை 2 நாட்களுக்கு முன் டில்லி சென்றார். அங்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவை சந்தித்து பேசினார்.
அவர்கள் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின. டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு செல்வபெருந்தகை, நேற்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறிய பொழுது…தொகுதி உடன்பாடு செய்வதில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடோ, இழுபறியோ இல்லை. கடந்த தேர்தலில்கூட கடைசி நேரத்தில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. டில்லி பயணம் கட்சியின் கட்டமைப்பு, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தத்தான். தமிழகத்தில் தவறாக சித்தரித்து கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
திமுகவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கருணாநிதியின் நினைவிடம் திறப்பு விழாவில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி பங்கேற்றார்கள். முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் உடன்பிறவா சகோதரர்கள் போல உறவு வைத்துள்ளனர். அவர்களை பிரிக்க வேண்டாம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து தகவல் வரும். இவ்வாறு அவர் கூறினாலும் ஆறே ஆறு சீட்டுதான் இல்லைனா ஓடு எனக்கூறியதாக தெரிவிக்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் நமக்கு வேண்டியவர்கள் அப்படினா இருக்கவே இருக்கு அதிமுக கூட்டணி என கண்ணை சிமிட்டுகிறார்கள்.