பெற்றோருடன் மாணவர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு !!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்த ஜமீன்கூடலூர், அகரம், கோணலூர், ராஜந்தாங்கல், உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து புதிய ஆதார் கார்ட் பதிவு செய்தல் ஆதார் கார்டு பிழை திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் இயங்கி வரும் இ- சேவை மையத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்த இ- சேவை மையத்தில் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டுகளில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்களை பிழைதிருத்த கடந்த நான்கு நாட்களாக பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் அலைகழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்றும் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் ஆதார் திருத்தம் மேற்கொள்ள வந்துள்ள பொழுது இ- சேவை மையத்தில் இன்று போய் நாளை வாங்க என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவர்களுடன் திருவண்ணாமலை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது தேர்வு எழுத இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பள்ளியில் வேலை நாட்கள் மட்டுமே இ-சேவை மையம் செயல்படுவதாகவும் அவ்வாறு செயல்படும் இ-சேவை மையமும் முறையாக பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் இ-சேவை மையத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பெயரில் பெற்றோரும் பள்ளி மாணவர்களும் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.