கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே பாலம் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்…
கும்பகோணம் காமராஜர் சாலை நடுவே செல்லும் வாய்க்கால் பாலம் சிதிலடைந்த நிலையில் காணப்பட்டது. இந்தப் பாலத்தை முற்றிலும் இடித்து விட்டு புதிய பாலம் கட்டுவதற்காக நெடுஞ்சாலை துறையினர் ரூபாய் 18 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணியில் நேற்று முன்தினம் இரவு முதல் ஈடுபட்டனர்.
இதையடுத்து பழைய பாலம் அமைந்த பகுதியை ராட்சத பொக்லின் இயந்திரம் மூலம் நேற்று இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த இடத்தில் பெட்டி வடிவ 3 மீட்டர் உள்ளளவு கொண்ட நான்கு பக்க வாய்க்கால் சுவர்கள் அமைக்கப்படும் பணி தொடங்கியது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முக்கிய பாதையாக காமராஜர் சாலை பாலம் உள்ளது. இதனை புதுப்பித்து புதிய பாலம் கட்டுவதற்கு 18 லட்சத்தில் திட்டம் தீட்டப்பட்டு தற்போது பாலம் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன.
இதற்காக பாலத்தின் உள்பகுதி தனி இடத்தில் கட்டப்பட்டு அதனை எடுத்து வந்து அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று வரை நடைபெற்றன. இந்த புதிய பாலம் 15 மீட்டர் நீளத்திலும் 3 மீட்டர் அகலத்திலும் 3 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 3 நாட்களில் முடிவுற உள்ளது. அதன் பின்னர் ஒரு சில நாட்களில் இந்த பாலம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இதற்கிடையில் இந்த பாலத்தின் குறுக்கே செல்லும் மாநகராட்சி குடிநீர் பாதை சுற்றி கம்பிகளால் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.
இந்தப் பணிகள் முடிந்த பிறகு இதன் மேல் தளம் அமைக்கப்படும். அதன் பிறகு இந்த பாலத்தின் வழியே போக்குவரத்து தொடங்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினார்.