சிறைப்பறவையின் கதை ! மூன்று மாதத்தில் முடியுமா வழக்கு ?
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது அதில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ளார்.
தீர்ப்பின் முழு விபரம்…அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவில், வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எம்.பி. எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆதாரங்கள் திருத்தப்பட்டிருப்பதாக முடிவுக்கு வர எந்த காரணங்களும் இல்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார். ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானதுதான், அதன் மதிப்பை சந்தேகிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து செந்தில்பாலாஜி குற்றம்புரியவில்லை என நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சாட்சிகளை கலைக்க மாட்டார் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்புதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் இருந்த 8 மாதங்களில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்ததன் மூலமும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளதிலிருந்தும், அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதையே காட்டுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ.-வாக நீடிப்பதால் அரசில் அவருக்கான செல்வாக்கு தொடர்கிறது என்று முடிவிற்கு வர எந்த தயக்கமும் இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் காட்சிகளாக இருப்பதால் அவர்கள் அச்சுறுத்தப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் புகார்தாரர்களுடன் சமரசம் செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்து வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், பொது நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் பெற தகுதியில்லை என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 8 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்து வருவதால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.