அருள்பாலிக்கும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி..

0

சைவத் திருத்தலங்களில் முக்கியமானதும், பஞ்ச பூதஸ்தலங்களில் அப்பூஸ்தலம் என அழைக்கப்படும் நீர்த்தலமுமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சோழநாட்டில் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கிடையே இத்தலம் அமைந்துள்ளதால் ஜம்புத்தீவு என்ற பெயரையும் கொண்டுள்ளது, யானை பூசித்து பேறு பெற்றதால் “திரு ஆனைக்கா” (கஜாரன்யம்) என்றும் ஜம்பு மரத்தின் (வெண்ணாவல்மரம்) கீழ் சிவபெருமான் வீற்றிருப்பதால் ‘ஜம்புகேஸ்வரம்” என்றும் அன்னை அகிலாண்டேஸ்வரி தவம் செய்து சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றதால் “ஞானஷேத்திரம்” என்றும் பல சிறப்புக்களை இத்தலம் பெற்று விளங்குகின்றது.

முற்பிறவியில் சிலந்தியாக இருந்து ஜம்புகேஸ்வரரை வழிபட்டவன் மறுபிறவியில் கோட்செங்க சோழனாக பிறந்து இக்கோயிலை சுமார் இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாக வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன. உமா தேவி, திருமால், பிரம்மன், அஷ்டதிக்கு பாலகர், அஷ்டவசுக்கள், சம்பு முனிவர், கவுதமர், அகத்தியர், கணநாதருள் மாலியவான் என்னும் சிலந்தி, புஷ்ப தத்தன் என்னும் யானை, சூரியன், சந்திரன் முதலியோர் இத்தலத்தில் வழிபட்டு நற்பேறு பெற்றனர்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன், தாயுமானவர் ஆகியோரால் பாடல் பெற்றது. இத்தலத்தில் தான் கவிகாளமேகப் புலவர் அம்பாளின் அருள் பெற்று கவிபாடும் திறனை பெற்றார். என்பது சிறப்புச் செய்தியாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலுக்கு ஐந்து பெரிய மதில்கள் உண்டு. ஐந்தாவது மதிலை சிவபெருமானே சித்தர் வடிம் தாங்கி வந்து கூலியாக திருநீற்றை கொடுத்து எழுப்பித்ததால் ‘திருநீறிட்டான் திருமதில்’ என்று இம்மதில் இன்றளவும் வழங்கப்பெறுகிறது.

ஒரறிவு சிற்றினமான சிலந்திக்கும் யானைக்கும் சிவபரம் பொருள் முக்தி கொடுத்தருளியது இத்தலம்.

வழிபாட்டின் மூலம் சேவார்த்திகள் பெறும் பயன்கள என்னவென்று தெரியுமா

‘இத்திருக்கோயில் ஆனைக்கா அண்ணலை வழிபடுவோர் இம்மையிலும் மறுமையிலும் இன்ப நலன்கள் கூடிப்பெறுவர். அன்னை அகிலாண்ட நாயகியானவள் காலையில் மகாலெட்சுமியாகவும், பகலில் துர்க்கையாகவும், மாலையில் சரஸ்வதியாகவும், கன்னிவடிவமுடன் காட்சி அளித்து வரும் அன்னை அகிலாண்ட நாயகியை வழிபடுவர்கள் ஞான ஒளி பெற்றும் சிறந்த கல்வி மான்களாகவும் ஆவார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் அன்னையை வலம் வந்து வணங்குகின்ற கன்னியர்களுக்கு சிறந்த மணவாழ்வு அமையப்பெறுவர். மக்கட்செல்வம் இல்லாத மாந்தர்கள் மகப்பேறு பெறுகின்றனர்.

இத்தலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மக்கட் செல்வங்களுடனும் திகழ்வார்கள் என்பது திண்ணம்.

சிவபெருமானே சித்தர் வடிவங்கொண்டு கட்டப்பெற்ற திருநீறிட்டான் திருமதில் என்று அழைக்கப்படும் 5ஆம் திருமதிலை (ஒரு மண்டலம்) சுற்றி வருவோர்க்கு நினைத்த காரியம் கைகூடும் என்பது வழக்கத்தில் இன்றளவும் இருக்கிறது.

இத்திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரமான ஆரியபடாள் கோபுர நுழைவு வாயிலில் அமைந்துள்ள மண்டபக் கற்றூண்கள் ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்டவை. இவைகளில் வடிவக்கப்பட்டுள்ள கற்சங்கிலிகள் மற்றும் பன்னிரண்டு ராசிகளின் சின்னங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்றும் திருக்கோயிலில் ஆங்காங்கே உள்ள கற்றூண்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கற்றூண்கள் ஆகியவற்றில் சிற்ப வேலைப்பாடுகள் கட்டிடக்கலைக்கு சான்றாக இருக்கிறது. 1910ம் ஆண்டில் சுவாமிக்கும் அம்மனுக்கு இரு பெரிய தேர்களும் செய்யப்பட்டும், கோரதமும் மற்றும் வாகனங்களும் மர வாகனங்களும் உள்ளன.

இத்திருக்கோவில்களில் இதுவரை இங்கு கிடைக்கப்பெற்றுள்ளது 156 கல்வெட்டுகளாகும். இவற்றுள் மதுரை கொண்ட பரகேசரிவர்மனாகிய பராந்தக சோழனின் கல்வெட்டுக்களே மிகத் தொன்மை வாய்ந்தவை. இவற்றின் மூலம் திருக்கோயில் திருப்பணிகள், சொத்துக்கள் போன்ற விபரங்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

இக்கோயிலில் நவ தீர்த்தங்கள் உள்ளன

logo right

1. ஸ்ரீமத் தீர்த்தம்,

2. ராம தீர்த்தம்,

3. சந்திரத்தீர்த்தம்,

4. அக்கினி தீர்த்தம்,

5. இந்திர தீர்த்தம்,

6. அகத்திய தீர்த்தம்,

7. ஜம்பு தீர்த்தம்,

8. பிரம்ம தீர்த்தம்,

9. சூரிய தீர்த்தம்.

தலவிருட்சமாக வெண்ணாவல் மரம் உள்ளது.

உமாதேவியார் சிவபெருமானை தியானித்து தீர்த்தத்தையே திரட்டி சிவலிங்கமாக செய்து ஸ்தாபித்தார். எனவே அப்புலிங்கம் என பெயர் பெற்றது. எக்காலமும் தீர்த்தம் பெருகி கொண்டே இருக்கிறது. இதுவே‘ஸ்ரீமத் தீர்த்தம்’ எனப்படும். சுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இது யானை புகாதபடி கட்டிய மாடக்கோவிலாகும். திருநாவுக்கரசர் ‘செழு நீர்த்திரள்’ என்று ஜம்புநாதரை போற்றி பாடியுள்ளார். ஞான வடிவமான ஜம்பு முனிவர் வெண்நாவல் மரமாக (ஸ்தல விருட்சம்) இத்தலத்தில் ஜம்புகேஸ்வர லிங்கத்திற்கு அருகில் நிழல் அளித்துக் கொண்டிருக்கிறார்.

சுவாமி சன்னதிக்கு முன்புள்ள ஒன்பது துவார சன்னல் வழியாக இறைவனை வணங்கினால் ஒன்பது புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சிவ புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் அகிலாண்டேஸ்வரியம்மன் சுவாமி சன்னதிக்கு வலதுபுறத்தில் கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் எழுந்தருளியிருக்கிறாள். அகிலாண்டேஸ்வரிக்கு ஆதி சங்கரர் ஸ்ரீசக்ர தாடங்கம் சாத்தப்பெற்றுள்ளது.

அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் பெரிய அளவில் பிரசன்ன விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு உச்சிக்கால பூசையில் அம்பாளே சுவாமியை பூசிப்பதாக ஐதீகம். அப்போது அம்பாள் சன்னதி அர்ச்சகர் பெண் வேடமிட்டு மேள தாளம் மற்றும் ஆலிலை வட்டத்தோடு விருதுகளுடன் வந்து சுவாமியை பூசித்து அதன் பின் கோபூஜை செய்வார், அதன்பிறகே அம்மன் சன்னதிக்குச் சென்று பூஜைகள் செய்வார். அன்றாடம் நிகழும் இப்பூசையை காண பக்தர்கள் பெருந்திரளாக வந்து வணங்கி அருள் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியை காண கண்கள் கோடிவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.