டிசம்பரில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு !!
நாட்டின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2022 டிசம்பரில் ஒரு கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் டன்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் இறக்குமதி 2 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது.
நாட்டின் கார்பன் உமிழ்வை 2070ம் ஆண்டுக்கு பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரும் இலக்கை நிர்ணயித்துள்ள மத்திய அரசு, நிலக்கரி இறக்குமதியை 2026ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில்தான் 2022 டிசம்பரை விட, 2023 டிசம்பரில் நிலக்கரி இறக்குமதி அதிகரித்த தகவலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தும் நிலக்கரியின் இறக்குமதி 2022 டிசம்பரில் ஒரு கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் டன்களாக இருந்தது. கடந்த டிசம்பரில் இது ஒரு கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது.
இரும்பு, உருக்கு, சிமென்ட் தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் இறக்குமதி 47 லட்சத்து 10 ஆயிரம் டன்களில் இருந்து 48 லட்சத்து 40 ஆயிரம் டன்களாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிலக்கரி இறக்குமதி 2022ல் 19 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம் டன்களாகவும், கடந்த ஆண்டில் 19 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் டன்களாகவும் இருந்ததாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே இன்று நிலக்கரி பங்குகளின் விலை உயரவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.