திருச்சி, திண்டுக்கல் அக்கறையா ! அரசு உத்தரவா ?
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறவில்லை. தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. பெற்றோர்கள் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார் .
மேலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே வதந்தி பரப்பிய வேடசந்தூர் மற்றும் வேடசந்தூரில் வதந்தி பரப்பிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களை பரவ விட்ட வடிவேல், தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வந்தால் உண்மைத் தன்மை அறியாமல் பகிர வேண்டாம் எனவும், தொடர்ச்சியாக யாரேனும் இது போன்ற தகவல்களை பகிர்ந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோலவே திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரும் பேட்டியளித்தார்…சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.
உங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் யாரேனும் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும். எனத்தெரிவித்தார், இப்படி மாநிலம் தோறும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருப்பது உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறையா அல்லது அரசு மேலிட உத்தரவா என்னும் கேள்வி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.