அசத்தல் அபூர்வ சசோதரிகள் !!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தசேரன் – கந்தா தம்பதிக்கு மகள்களான அக்கா அபிராமியும் தங்கை அரசிலங்குமாரி அவர்களது தம்பி ஆறுமுகம் ஆகிய மூன்று பிள்ளைகளை விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். மகள்கள் இருவரையும் வெவ்வேறு கிராமங்களில் திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அக்கா தங்கை இருவரும் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நினைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, கிராம பகுதியில் நாம் வாழ்வதால் விவசாயிகளிடமிருந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்ய நினைத்தனர். இதற்காக வங்கி உதவியுடன் பணம் பெற்று டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றையும் வாங்கினர்.
மேலும் வாகனங்களை தாங்களே இயக்க நினைத்த அரசிலங்குமரி இதற்காக ஓட்டுனர் உரிமமும் பெற்றுள்ளார். டாட்டா ஏஸ் வாகனம் மூலம் சுற்றுவட்டார கிராமங்களான கழிக்குளம், ராமநாதபுரம், காணலாபாடி, கனபாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது விளை நிலங்களுக்கே சென்று நேரடியாக வெண்டைக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, பிடிக்கரணை, பச்சை மிளகாய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளை கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகளை திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அவலூர்பேட்டை, வளத்தி, செஞ்சி, பூதமங்கலம், வேடந்தவாடி, கனபாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வாரச்சந்தைகளில் சென்று பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள் உடனடியாக சந்தைப்படுத்தப்படுவதால் காய்கறிகள் வெயிலில் வதங்காமல் தரமாக பொதுமக்களுக்கு சென்றடைகின்றது. அது மட்டுமல்லாது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தினால் பயனடையவதுடன் சந்தை மதிப்பை விட குறைவான மதிப்பில் காய்கறி விற்பனை செய்வதால் அதிக அளவு விற்பனை நடைபெறுகிறது என்றும் இதனால் மனநிறைவும் போதிய லாபமும் கிடைப்பதாக அபிராமி மற்றும் அரசிலங்குமரி சகோதரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த சகோதரிகளின் தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
’கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள், என்று சும்மாவா சொன்னார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.