அண்ணாமலை நடைபயணத்துக்கு பிறகு – ACS அதிரடி !!
ஏசிஎஸ் குழுமம் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரவை தொகுதிகள் வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி, ஏற்கனவே 6 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், 7வது வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு முகாம் வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதில், 130 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் மூலம் 1, 689 பேரை தேர்வு செய்தனர். வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பணிஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 9 மாதங்களாக மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 294 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி 1.90 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனையும், 3800 பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளோம். தவிர, 7 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி சுமார் 13500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது.
மேலும், கிரிக்கெட், கபடி, மாரத்தான் போன்ற பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டிக்கு ஆம்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் ஜாபர்சாதிக் போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டி மாநில அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதே இந்த தடை விதிப்புக்கு காரணம் என கருதுகிறோம்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசும் அணை கட்ட முயற்சிக்கிறது. இதை தடுத்த தமிழக அரசுதான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து பேசுவதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
அண்ணாமலை நடைபயணத்துக்கு பிறகு தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. இது வரக்கூடிய மக்களவைத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும் என்றார்.