தடை விதித்ததா தமிழக அரசு அயோத் ‘தீ’…
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இது, தமிழகம் முழுவதும் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் போது, அந்தந்த பகுதியில் உள்ள பக்தர்கள், இந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தங்கள் சொந்த செலவில் கோவிலில் அன்னதானம் வழங்குவது வழக்கம் சிறப்பு பூஜைகளும் செய்யப்படும்.கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றனர். திருமணம், பிறந்தநாள் போன்ற சந்தர்ப்பங்களிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்குவது வாடிக்கை. இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி நாடே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், தமிழக கோவில்களிலும் பக்தர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது
‘அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்குதல், அது சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது. ‘கோவில் நிர்வாகம் சார்பிலோ பக்தர்கள் பெயரிலோ அமைப்புகள், கட்சிகள் பெயரிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. அதை விளம்பரப்படுத்தி பேனர் வைக்கக் கூடாது. மீறி அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என வாய்மொழியாக எச்சரிக்கப்பட்டுள்ளது. என்றும் தொலைப்பேசி உரையாடல்கள், காவல்துறை அனுமதி அளிக்க மறுத்த கடிதம் போன்றவை சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இது தவறான செய்தி என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதுடன் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.