தா.பாண்டியன் மணி மண்டபம் இடைக்கால தடை !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுாரைச் சேர்ந்த பிரேம்சந்தர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தப்பநாயக்கார் அய்யன்கோவில்பட்டியில் என் தந்தை ராஜனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலம் உரிமை தொடர்பாக ராஜன், அவரது சகோதரர் தா.பாண்டியன் எனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலர் இடையே பிரச்னை இருந்தது.
என் தந்தை 2011ல் இறந்து விட்டார். இருப்பினும் வழக்கு நிலுவையில் உள்ளது. தா.பாண்டியன் 2021 பிப்ரவரி 26ல் இறந்தார், இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 2024 பிப்ரவரி 26ல்,சர்ச்சையில் உள்ள நிலத்துக்குள் அத்து மீறி நுழைந்தனர். பாண்டியனுக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்ட வந்ததாகக் கூறினர். கற்களை வைத்து, அதில் கட்சிக் கொடியை நிறுத்திச் சென்றனர், நில உரிமை தொடர்பாக சர்ச்சை உள்ள நிலையில், மேற்படி நிலத்தில் மணிமண்டபம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதி பதி,’நிலத்தின் உரிமை தொடர்பாக சர்ச்சை உள்ள சூழலில், மேற்படி நிலத்தில் மணி மண்டபம் அமைப்பது தொடர்பாக யாரும் அனுமதி கோரினால், அதற்கு வருவாய் துறை அனுமதி வழங்கக் கூடாது’ என்று இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டார்.