மூவருக்கு செக் உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட் !
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு அங்குள்ள கட்சிகளிடம் கூட்டணியை ஏற்படுத்தி தனது தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்து வருகிறது.
அதேபோல காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளிடம் கிடைத்தவரை லாபம் என தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
இந்நிலையில் உளவுத்துறை மூலம் திமுக எடுத்து வைத்திருக்கும் சர்வே முடிவுகள் திகைப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.முன்பு கூட்டணிக்கு கொடுக்கப்பட்ட சில தொகுதிகளை இப்போதும்கொடுத்தால் அந்த இடங்களில் எதிர்த்து நிற்கும் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக திமுகவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளனவாம். அதனால் அங்கெல்லாம் திமுகவே போட்டியிடுவதுமான முடிவில் இருக்கிறதாம். அத்துடன் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து களமாடிவரும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் ஆகியோர் தேர்தலில் நின்றால் அவர்களை தோற்கடிக்க பிரத்யேகமாக திட்டத்தையும் திமுக தீட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மூவரும் எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்களோ அங்கு திமுகவிலிருந்து நேரடியாக பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இன்று இணைத்துவிட்டார் ஆக திமுக எப்படிப்பட்ட மூவை நிகழ்த்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.