தக்காளி லோடு : கவிழ்ந்து விபத்து…அள்ளிச் சென்ற கிராம மக்கள் !!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கல்வார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து நூறு பெட்டிகளில் 31/2 டன் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது. மினி வேனை அரூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்தார். கல்வார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த பொழுது திடீரென வேனின் பின்பக்க வலது பக்க டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கரூர் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நடுரோட்டில் கவிழ்ந்தது. வேனில் இருந்த தக்காளிகள் அனைத்தும் ரோட்டில் கொட்டியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் வேனை நிமிர்த்தி சாலையோரம் நிறுத்தினர்.
வேனை நிமிர்த்தியதற்காக கூலியாக கொட்டி கிடந்த தக்காளிகளை கல்வார்பட்டி கிராம மக்கள் சாக்கு பை மற்றும் கட்டை பைகளில் வீட்டுக்கு அள்ளி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் கொஞ்ச நாளைக்கு திண்டுக்கல் போறவங்களுக்கு தக்காளி தொக்கும் தக்காளி ஜாமும் நிச்சயம் !