துணைமின் நிலையம் : தனியார் அமைத்து பராமரிக்க ஆணையம் உத்தரவு…
தமிழக மின் வாரியம், 200 கோடி ரூபாய்க்கு மேல் அமைக்கும் துணைமின் நிலையம், மின் வழித்தடங்களை அமைத்து, பராமரிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில், புதிய விதியை அமல்படுத்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அனல் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், 400 கிலோ வோல்ட், 230, 110, 33/ 11 கி.வோ., துணைமின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு, மின்சாரத்தின் உயரழுத்தம் குறைக்கப்பட்டு, மின் சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, 110 கி.வோ., திறனுக்குமேல் துணைமின் நிலையங்கள், மின் வழித்தடம் அமைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம், ‘டெண்டர்’ கோருகிறது. அதில் தேர்வாகும் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்படுகிறது. அந்நிறுவனம், கட்டுமான பணிகளை முடித்ததும், மின் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
புதிய விதிமுறை மத்திய அரசின் அறிவுரைப்படி, துணைமின் நிலையம் அமைப்பதில் புதிய விதியை அமல்படுத்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்ட செலவு உடைய துணைமின் நிலையம், மின் வழித்தட பணிக்கு, ‘டேரிப் பேஸ்டு காம்படிட்டிவ் பிட்டிங்’ எனப்படும், ‘டெண்டர்’ கோர வேண்டும்.
அதில், தனியார் நிறுவனங்கள், மின் தொடரமைப்பு கழகம் என, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எந்த நிறுவனம் குறைந்த விலை கோருகிறதோ, அதனிடம் துணைமின் நிலையம் அமைக்கும் பணி வழங்கப்பட வேண்டும். அந்நிறுவனம், தன் செலவில் துணைமின் நிலையம் அமைப்பதுடன், தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை, மின் வாரியம் வழங்க வேண்டும். இதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும்.
மின் வாரியம், நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், துணைமின் நிலையம் அமைக்க, மத்திய நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்குகிறது.குறித்த காலத்தில் பணிகளை முடிப்பதும் கிடையாது. இதனால் திட்ட செலவு அதிகரிக்கிறது. புதிய முறையால், துணைமின் நிலைய செலவுகள் குறையும்.
ஆணையத்தின் உத்தரவில், 400 கி.வோ., மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் துணைமின் நிலையங்களுக்கு எந்த முறையில் டெண்டர் கோரலாம் என, அரசிடம் ஆலோசனை கேட்டு செயல்படுத்த, மின் வாரியத்தை, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.