தூத்துக்குடி : அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது பெண் மோசடி புகார் !!
தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் என்பவர் தன்னிடம் வீடு வாங்குவதற்காக வாங்கிய 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை தராமல் ஏமாற்றி வருவதுடன் தன்னை தாக்கி மிரட்டல் எடுத்து வருவதாக அவரது முன்னாள் காதலி சுகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சி.த. செல்லப்பாண்டியன். முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான இவர், தற்போது அதிமுக வர்த்தக அணியின் மாநில செயலாளராக உள்ளார். சி.த. செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகனான ஞானராஜ் ஜெபசிங்குக்கும், தூத்துக்குடியைச்சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த சுகந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஏற்கெனவே திருமணமான ஞானராஜ் ஜெபசிங் தனது குடும்பத்தைவிட்டு வெளியேறி சுகந்தியுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். தூத்துக்குடி அன்னைதெரசா நகரில் வீடு ஒன்றை ஜெபசிங் விலைக்கு வாங்கி உள்ளார். அந்த வீடு வாங்குவதற்காக தன்னிடம் ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை வாங்கிக் கொண்ட ஞானராஜ் ஜெபசிங் அந்த வீட்டை தனது பெயருக்கு வாங்கி ஏமாற்றிவிட்டதாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சுகந்தி தற்போது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அந்த வீட்டை முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் விற்க முயற்சி செய்தவதாகவும் அதற்காக அட்வான்ஸ் தொகை பெற்று உள்ளதால் தன்னை மிரட்டி வருவதாகவும் சுகந்தி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், அவரது மனைவி இந்திரா, மகன் ஞானராஜ் ஜெபசிங் ஆகியோர் எனது வீட்டை அபரித்துக் கொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மிரட்டி வருகின்றனர். தூத்துக்குடி அன்னை தெரசா நகரில் உள்ள வீட்டில் நானும், ஜெபசிங்கும் ஒன்றாக வசித்து வந்தோம், அந்த வீட்டை எனது பெயரில் வாங்குவதாக உறுதி அளித்த ஜெபசிங் அவரது பெயருக்கு பதிவு செய்து ஏமாற்றிவிட்டார். தற்போது அந்த வீட்டை விற்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஞானராஜ் ஜெபசிங் முந்திரி கொட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார். அப்போது தனக்கும், தனது மகன் ஞானராஜ் ஜெபசிங்குக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தற்போது தனது மகனை குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டு என்னை மிரட்டி வருகிறார். ஞானராஜ் ஜெபசிங் தாக்கியதில் நான் காயம் அடைந்துள்ளேன்.
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், அவரது மனைவி இந்திரா, மகன் ஞானராஜ் ஜெபசிங் ஆகியோர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வீடு வாங்குவதற்காக நான் கொடுத்த ரூபாய் 30 லட்சம் மற்றும் நகைகளை உடனே திருப்பித் தர வேண்டும் என சுகந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.