அகிலமே வியந்த அயோத்தி ராமர் கோவில் பிரம்மாண்ட விழா…
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு நாதஸ்வர இசையுடன் விழா தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் அனில் அம்பானி முகேஷ் அம்பானி அதானி, அமித்தாபச்சன், பாலிவுட் திரைப்பட பிரபலங்கள் தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த் தனுஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த மோடி தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார். கருவறை அருகே உள்ளே வந்த மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அமர்ந்தார். மோடி சங்கல்பம் செய்து கொண்டார். சரியாக 12.20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைந்த மோடி மற்றும் மோகன் பகவத் இருவரும் குழந்தை ராமர் சிலையின் எதிர்புறம் அமர்ந்து அங்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யும் பூஜைகள் நடைபெற்றது. அங்கு கோவில் அர்ச்சகர்கள் கூறிய மந்திரங்களை பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் உச்சரித்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி தனது கையில் இருந்த பூக்களை ராமர் பாதத்தின் மீது தூவி பிரதிஷ்டை பணிகளை நிறைவு செய்தார். அவருடன் மோகன் பகவத் மற்றும் கோயில் பூசாரிகள் ராமர் பாதத்தில் பூக்களைச் சமர்ப்பித்தனர். இதன்மூலம் குழந்தை ராமர் சிலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. குழந்தை ராமரின் சிலையின் கால்களை தொட்டு வணங்கி மனமுருக பிரதமர் மோடி வேண்டிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களும் இதில் பங்கேற்றனர். பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் ராமரை தரிசிக்கலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று அயோத்தி நகரில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. அயோத்தியின் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஓட்டல், விடுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். திறப்பு விழா முடிந்த பிறகு, நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 70,000 பேர் தரிசனம் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதற்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார். அத்தோடு ராமருக்கு தொடர்பு உள்ளதாக அறியப்பட்ட ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கும் திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.