அரியலூர் : அள்ளியது பறக்கும் படை…
அரியலூர் மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லுர் செக்போஸ்ட், வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். அப்போது வேன் டிரைவர் மகாலிங்கம் வேனை ஓட்டி வந்தார். சரக்குவேனில் சேலத்தில் இருந்து தங்கநகைகள் கொண்டு வருவதால் வேன் கதவுகளை உரிய பாதுகாப்பு இல்லாமல் திறக்கமுடியாது என்று கூறினார்.
பறக்கும்படை அதிகாரிகள் சரக்குவேனை குடந்தை ஆர்டிஓ., அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து ஆர்டிஓ., பூர்ணிமா முன்னிலையில் சரக்கு வேனை திறந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில் ரூபாய் 12 கோடி மதிப்புள்ள தங்கநகைகளை சேலத்தில் இருந்து விருத்தாச்சலம்,ஜெயங்கொண்டம் வழியாக குடந்தையில் உள்ள பிரபல ஜூவல்லரிக்கு கொண்டு வருவதும், தங்க நகைகளுக்கான ஆவணங்கள் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர் மகாலிங்கம் மற்றும் பாதுகாப்புக்கு வந்த அலுவலர்களிடம் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களை தேர்தல் கண்காணிப்பு அல்லது பறக்கும் படை அதிகாரிகள் கேட்டால் பார்வைக்கு காண்பித்து எடுத்து வேண்டும் என்று அறிவுறுத்தி, ரூபாய் 12 கோடி மதிப்புள்ள தங்கநகைகளை திரும்ப ஒப்படைத்தார்.