108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆதிபிரம்மோற்ஸவம் எனப்படும் பங்குனித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவினையடுத்து, தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வந்தார். முக்கிய நிகழ்வான பங்குனித்தேரோட்டம் 10ம் திருநாளான இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் ரத்தின அபயஹஸ்தம், முத்து பாண்டியன் கொண்டை மார்பில் நீலநாயகம் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தாயார்சந்நதி வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி கோரதத்திற்கு வந்தடைந்தார்.
அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகளைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேர் நான்கு சித்திரைவீதிகளின் வழியாக வலம்வந்து, நிலையை அடைந்த பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தை சென்றடைவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில்நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தேர்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.