கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது ஆகவே முதலில் ஓடுங்கள்…
ஆட்சி பலம் ,பண பலம், அதிகார பலம் ஆகியவற்றிற்கிடையே தேர்தல் நடப்பதால் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஆளாக சென்று ஓட்டு போட வேண்டும். இல்லாவிடில் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று ஆற்காட்டில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து பேசினார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. எல். விஜயனை ஆதரித்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது…ராணிப்பேட்டை மாவட்டத்தில் எங்கள் சொந்தக்காரர்கள் உள்ளனர். எத்தனையோ முறை நானும் கேப்டன் விஜயகாந்த்தும் ஆற்காடுக்கு வந்துள்ளோம். இது மிக, மிக முக்கியமான தேர்தல் . தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கின்ற தேர்தல்.
ஆட்சி பலம் , பண பலம், அதிகார பலம் மற்றும் மத்திய, மாநில பலம் உள்ளவர்களுக்கு இடையே தேர்தல் நடக்கிறது. 2024ல் மெகா கூட்டணி அமைத்துள்ளோம் . இது மக்கள் விரும்பும் கூட்டணி. 2026க்கு இந்த கூட்டணி அச்சாரமாக இருக்கும். நம்முடைய கூட்டணியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் படித்த நல்ல வேட்பாளர். எல்லா மொழிகளும் தெரியும் . அவர் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் . ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார் . ஆனால் எந்தவித பலனும் இல்லை. அவர் எந்த வித வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. தொகுதி மக்களை சந்திக்கவில்லை.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட்டது. இங்கு கடைகள் எடுத்த வியாபாரிகள் நஷ்டத்தில் உள்ளனர். ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுகவினர் பொய்வாக்குறுதி கொடுக்கின்றனர். பாஜகவினர் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆற்காடில் உள்ள அரசு மருத்துவமனை தரம் இல்லாமல் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வருபவர்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.
ஆற்காட்டில் 30 ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரி கேட்டு வருகின்றனர் .ஆனால் யாரும் கலைக்கல்லூரி கொண்டுவரவில்லை. நம்முடைய வேட்பாளர் விஜயன் வெற்றி பெற்றால் ஆற்காட்டில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவார். இங்குள்ள பாலாறு மாசடைந்துள்ளது .மேலும் குரோமிய கழிவுகள் அகற்றாமல் இருப்பதால் புற்றுநோய் மற்றும் பலவித நோய்கள் இங்குள்ள மக்களுக்கு வருகிறது. குரோமிய கழிவுகளை போர்க்கால அடிப்படையில் விஜயன் வெற்றி பெற்று அகற்றுவார்.
காட்பாடி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது. அதை பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். நெசவுத் தொழில் மிக மிக முக்கியம் .ஆனால் இப்பகுதியில் நெசவு தொழில் நலிவடைந்து அதன் இயந்திரங்களை உடைத்து விற்பனை செய்து சாப்பிடும் நிலையில் நெசவாளர்கள் உள்ளனர். மனிதனுக்கு இரண்டு கண்கள் முக்கியம் என்பது போன்று விவசாயமும், நெசவும் மிக மிக முக்கியம்.
வறுமை , வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் உள்ளனர் . எனவே வறுமை இல்லாத வாழ்க்கை அமைத்து தரப்படும். அரக்கோணம் ரயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் . திண்டிவனம் நகரி ரயில் பாதை பணிகள் விரைவுப்படுத்தப்படும். அரக்கோணத்தில் 3 வது மற்றும் 4 வது ரயில்வே பாதை பணிகள் விரைவு படுத்தப்படும். ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இவை அனைத்தும் செயல்படுத்த வெற்றி என்ற ஒரே அங்கீகாரத்தை வேட்பாளர் விஜயனுக்கு வாக்காளர்கள் தர வேண்டும்.
ஏப்ரல் 19ம் தேதி முதல் ஆளாக சென்று ஓட்டு போட வேண்டும் .கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எந்த வேலை இருந்தாலும் கட்சி துண்டு, கரை வேட்டி அணிந்து முதல் ஆளாக சென்று வேட்பாளர் விஜயனுக்கு ஓட்டு போடுங்கள் . வேட்பாளர் விஜயன் டெல்லி செல்வதை உறுதி செய்யுங்கள்.
ஜெயா ,விஜயா என மகத்தான கூட்டணி ஏற்கனவே அமைக்கப்பட்டது. நம்முடைய வேட்பாளர் பெயரும் கேப்டனின் பெயரில் பாதி உள்ளது. இது ராசியான கூட்டணி. அதிமுக நான்கு எழுத்து, தேமுதிக நான்கு எழுத்து, எஸ்டிபிஐ கட்சி நான்கு எழுத்து , ஜூன் 4 ல் வாக்கு எண்ணப்படுகிறது. நாற்பதும் நமதே. இது மக்களுக்கான கூட்டணி என்பதால் சரித்திரம் படைக்கும் கூட்டணியாக இருக்கும்.
தமிழகத்தில் கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, லாட்டரி சீட்டு , வேலையின்மை உள்ளது. திமுகவினர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இது போன்ற கஞ்சா புழக்கத்தை தமிழகத்தில் இதுவரை மக்கள் பார்த்ததே இல்லை. காட்பாடியில் மணல் கொள்ளை அடித்து அவரது மகனை வெற்றி பெறச் செய்ய அந்த அமைச்சர் துடிக்கிறார். தர்மத்தின் பக்கம் தான் தமிழக மக்கள் இருப்பார்கள். நம்முடைய வேட்பாளர் ஏ .எல் விஜயனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் .இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.