கோவை பேரணிக்கு பச்சை கொடி காட்டிய நீதிபதி !
மார்ச் 18ம் தேதி கோவை வரும் பிரதமர் மோடி, கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு வரை திறந்த காரில் நின்றவாறு மக்களை சந்திக்கும்`ரோடு ஷோ’ நடத்த உள்ளதாகவும், 4 கிலோமீட்டர் தூரத்துக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.
பிரதமர் மோடியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்திருந்தது.ஆனால், பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு காரணம் கருதி கோவை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி, மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடுஷோ நடத்த உள்ளதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், 18ம் தேதி நிகழ்ச்சிக்கு 14 ம் தேதி கடிதம் தான் கொடுத்ததாகவும், 18 மற்றும் 19ம் தேதி பொதுத்தேர்வு உள்ளதாகவும், கோவை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையும், காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை எந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என கேள்வி எழுப்பி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், மாலை 5.25 மணிக்கு பிறப்பித்த உத்தரவில், பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமரின் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகள் சிவற்றையும் விதித்தார்… பிரதமரின் ரோட் ஷோ நடைபெறும் நிகழ்ச்சியில் பளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என காவல்துறை நிபந்தனை விதிக்கலாம்., பாதிகாப்பை கருதி காவல்துறை தெரிவிக்கும் நிபந்தனைகளை மனுதாரர் பின்பற்ற வேண்டும், சம்மந்தப்பட்ட அனைவரும் பிரதமரின் நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.