இனிக்குமா ! கசக்குமா…?
இந்தியாவில் நடப்பு சர்க்கரை பருவத்தில் மொத்த சர்க்கரை உற்பத்தியின் அளவு 3 கோடியே 16 லட்சம் டன்களாக இருக்கும் என்று அகில இந்திய சர்க்கரை வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டின் சர்க்கரை உற்பத்தி 3 கோடியே 29 லட்சம் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்த நிலையில் 20 லட்சம் டன் சர்க்கரை, எத்தனால் உற்பத்திக்கு திருப்பப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக இந்த சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
நடப்பு கரும்பு அரவைப் பருவத்தில் இதுவரை நடந்த கரும்பு அறுவடை, உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை உட்பட பல்வேறு மதிப்பீடுகளை கொண்டு முதல்கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 3 கோடியே 16 லட்சம் டன்களாக இருக் கும் என்று மதிப்பிட்டுள்ளோம்.
இது கடந்த பருவத்துடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் உற்பத்தி வீழ்ச்சியாகும். இருப்பினும் நடப்பு பருவத்தில் உபியில் சர்க்கரை உற்பத்தி ஒரு கோடியே 17 லட்சம் டன்னாகவும், மகாராஷ்டிராவில் 96 லட்சம் டன்னாகவும், கர்நாடகாவில் 47 லட்சம் டன்னாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஆண்டில் உபியில் ஒரு கோடியே 7 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கரும்புக்கு கூடுதல் விலையை அரசு அறிவித்துள்ளதால், அதிகப்படியான விவசாயிகள் ஆலைகளுக்கு கரும்புகளை வினியோகம் செய்யத்தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு சர்க்கரை உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த அரவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி ஒரு கோடி டன்னுக்கும் அதிகமாக இருந்தது. பற்றாக்குறை மழை, வறட்சியால் சர்க்கரை உற்பத்தி 96 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த பருவத்தில் 56 லட்சம் டன்களாக இருந்த சர்க்கரை உற்பத்தி இந்தப்பருவத்தில் 47 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. இதனால், நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி 3 கோடியே 16 லட்சம் டன்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.