திருச்சியில் துரை வைகோ போட்டி !
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த முறை திருச்சி நாடாளுமன்றத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆட்சி மன்றக்குழு கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து திருச்சி மதிமுக வேட்பாளராக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளரை அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘இந்தத் தேர்தலில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட முயன்று வருவதாக தெரிவித்தார். தனித்தன்மையை பாதுகாக்கவே தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கட்சியினர் உணர்ச்சிமயமாக இருக்கிறார்கள். மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோவை திமுக வெற்றி பெறச்செய்யும் என நம்புகிறோம். என்றார். பிற தொகுதிகளில் மதிமுக தொண்டர்கள் திமுக வெற்றிக்குப் பாடுபடுவார்கள் என்றும் வைகோ தெரிவித்தார். இதுவரை திருச்சியிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவராக இதே மதிமுகவில் போட்டியிட்ட எல்.கணேசன் திகழ்கிறார் அந்த சாதனையை முறியடிப்பாரா துரை வைகோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.