192வது ஆண்டு ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது !!
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி 192வது ஆண்டு தேர்த்திருவிழா பணிகள் கடந்த 23ம் தேதி தொடங்கியது.
விழாவின் முதல் நாளான கடந்த 23ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலமும் 24ம் தேதி இரவு பாலமுருகன் ஊர்வலமும் 25ம் தேதி இரவு பராசக்தி ஊர்வலமும் 26ம் தேதி பரிவாரத தேவதைகள் ஊர்வலமும் வாணவேடிக்கையும் நடைபெற்றது.
நேற்று இரவு 12 :30 மணி அளவில் மகா கும்பமும் அருள் வாக்கும் நடைபெற்றது. இந்த மகா கும்பத்தில் குழந்தையில்லா தம்பதிகள் கலந்து கொண்டு சாமிக்கு படைத்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் இதனால் மகா கும்பத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு படையலிட்ட சாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான 5ம் நாளான நேற்று ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் மகா உற்சவம் நடைபெற்றது. இதில் மங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்தத் தேர்த் திருவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளான பக்தி பாடல்கள், பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாட்டு நிகழ்ச்சி, கரகாட்டம், இன்னிசை பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை, மாபெரும் இன்னிசை கச்சேரி, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டனர் மேலும் தேர்த்திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.